அங்கன்வாடியில் சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு சமையலர்களுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள அங்கன்வாடி ஒன்றில் கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு சிறுவர்கள் மற்றும் மூன்று சிறுமிகளுக்கு அங்கன்வாடியில் சமையலராக பணியாற்றி வந்த அன்னக்கொடி மற்றும் சத்துணவு அமைப்பாளர் வைரம் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமையலர் அன்னக்கொடி மற்றும் சத்துணவு அமைப்பாளர் வைரம் ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.