கணவரின் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து கோரும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு உள்ளது என தெலுங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து குலா (விவாகரத்து) பெறுவதற்கு திருமண தகராறுகளுக்கு மத்தியஸ்தம் செய்யும் ஒரு அரசு சாரா இஸ்லாமிய நிறுவனமான சதா-இ-ஹக்-ஷராய் கவுன்சிலை அணுகியுள்ளார். இதையடுத்து கணவன் மனைவி இருவரை அழைத்து அந்த கவுன்சில் மத்தியஸ்தம் செய்துள்ளது. ஆனால், விவாகரத்து கொடுப்பதற்கு கணவர் சம்மதிக்கவில்லை. இருப்பினும், மனைவியின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து சான்றிதழை அந்த கவுன்சில் வழங்கியுள்ளது.
தனது சம்மதம் இல்லாமல் சதா-இ-ஹக் ஷராய் கவுன்சில் விவகாரத்து வழங்கியுள்ளதாகவும், அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த நபர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மெளஷுமி பட்டாச்சார்யா மற்றும் பி.ஆர்.மதுசூதன் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இஸ்லாமியச் சட்டத்தின்படி கணவரின் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து கோரும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு உள்ளது என்று கூறினர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, ‘இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் ஒரு திருமணமான பெண் ஒருதலைபட்சமான விவாகரத்து மூலம் தனது திருமணத்தை கலைக்க முடியும். இதற்கு கணவரின் ஒப்புதலோ அல்லது காரண அறிக்கையோ கூட தேவையில்லை. குர்ஆன் வசனங்கள் 228 மற்றும் 229இன் படி பெண்களுக்கு விவாகரத்து கோருவதற்கான தெளிவான உரிமையை வழங்குகிறது. ஒரு கணவர் விவாகரத்தை ஏற்க மறுத்தால் பின்பற்ற வேண்டிய எந்த நடைமுறையையும் மத நூல்கள் கோடிட்டு காட்டவில்லை. இது போன்ற மத அமைப்புகள் ஆலோசனைப் பணியை மட்டுமே செய்கின்றன. திருமணத்தில் இருந்து வெளியேறும் ஒரு பெண்ணின் உரிமைகளில் மத அமைப்புகள் குறுக்கிட முடியாது. திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் நீதிமன்றத்தின் ஒரே பங்கு, முத்திரை குத்துவது மட்டுமே. பின்னர் அது இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும்’ என்று கூறினர். இஸ்லாமியச் சட்டத்தில், குலா என்பது ஒரு முஸ்லிம் மனைவி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான ஒரு நடைமுறையாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/26/muslimwoman-2025-06-26-16-26-16.jpg)