திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி. பங்கேற்று சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பட்டம் வழங்கினார். அதோடு 650 பேருக்கு முனைவர் வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜூன் ஜோசப் என்ற மாணவி மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் ஆராய்ச்சி படிப்பை முடித்து ஆளுநரிடம் இருந்து முனைவர் பட்டம் பெறுவதற்காக மேடைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென தனக்குக் கொடுக்கப்பட்ட பட்டத்தை ஆளுநரிடம் கொடுக்காமல் அருகில் இருந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரிடம் கொடுத்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றார். இதனால் பட்டமளிப்பு விழாவில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்த விவகாரம் அப்போது தமிழகத்தில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி ஜூன் ஜோசப் மீது தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த மனுவில், ‘பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல. அதனால் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி ஜூன் ஜோசப்பின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று (08-12-25) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வந்தது. அப்போது நீதிபதிகள், “ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்த கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஒதுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக விதியை ஆய்வு செய்து வழக்கு விசாரணைக்கு உகந்ததா என டிசம்பர் 16ஆம் தேதி முடிவு செய்யப்படும் ” என்று கூறி இந்த வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/pattam-2025-12-08-16-39-14.jpg)