மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சட்டவிரோத கட்டுமானம் குறித்து சினேகா பார்வே என்ற பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் சினேகா பார்வேவை இரும்பு கம்பியால் தாக்கியதால் கூறப்படுகிறது. அதன் பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சினேகா பார்வே போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சினேகா பார்வே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கெளதம் ஏ அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பத்திரிகையாளர் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக பதிவாகி வருகிறது. அவர்கள் பத்திரிகையாளர்களை இப்படி செய்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்களுக்கு எதிராக யார் ஏதாவது புகாரளித்தால், அவர்கள் துன்புறுத்த முயற்சிக்கிறார்கள்’ என்று கூறினர். இதையடுத்து சினேகா பார்வே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ‘அவர் ஒரு பத்திரிகையாளர், ஜூலை 4, 2025 அன்று கடுமையாக தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட கொல்லப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவருக்கு மேலும் அச்சுறுத்தல்கள் வந்தன. பாதுகாப்பு கோரி அவர் காவல் கண்காணிப்பாளருக்கு மூன்று கடிதங்கள் எழுதினார், ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் என்ன? நீங்கள் ஒரு ரிட் நீதிமன்றத்தின் முன் இருக்கிறீர்கள். நீங்கள் ஆதாரங்களை சமர்பித்திருக்க வேண்டும். மனு முழுமையற்றதாக இருக்கிறது. தேவையான விவரங்கள் இல்லாத அல்லது முறையற்ற வடிவங்களில் தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்களை கையாள்வதில் நீதிமன்றத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த வழக்கில் அச்சுறுத்தல்களுக்கு சாட்சிகளிடமிருந்து பிரமாணப் பத்திரங்கள் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் இந்த விவகாரம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.