அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் சேலம்பாக்கத்தில் கேர் பல்கலைக்கழகம் என்ற தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்காக சேர்ந்த மாணவர்கள் சிலர், சில பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால், பல்கலைக்கழகத்தில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த வகுப்புகளுக்கு பிரேக் பீஸ் என்ற பெயரில் ஒரு பாடத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்தது.

Advertisment

இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், கூடுதல் கட்டணம் செலுத்ததால் பயிற்சிக்கு அனுமதி மறுப்பதாகவும், சான்றிதழ்களை தர மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் சார்பில், சிறப்பு வகுப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஏற்கெனவே மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல. இருப்பினும் அதற்காக ஏன் கட்டணம் வசூலிக்க வேண்டும்?. எனவே மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது. அந்த சான்றிதழ்களை இரண்டு வாரங்களில் மாணவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய மருத்துவத்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், ‘லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது’ என்று தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தார். 

Advertisment