இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில், பா.ம.க கட்சியானது ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இருவேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கட்சியின் அதிகாரம் எந்த அணிக்கு என்பது குறித்தும், கட்சியின் சின்னம் எந்த அணிக்கு வழங்கப்படும் என்பது குறித்தும் கேள்வி எழுந்தது. இது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  

Advertisment

இந்த சூழ்நிலையில், மாம்பழம் சின்னம் குறித்தான அதிகாரப்பூர்வ கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ராமதாஸ், இந்த கடிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் மாம்பழம் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கடிதம், தவறுதலாக அன்புமணியின் முகவரிக்குச் சென்றுள்ளதாகவும், இந்த சின்னம் தொடர்பான கடிதத்தை தங்கள் முகவரிக்கு அனுப்பத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறும்  கோரப்பட்டிருந்தது. மேலும், கடந்த 2025 மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர் தற்போது பாமகவில் தலைவராக இல்லை. இருந்த போதிலும், அவர் தலைவராக இருப்பதாகப் பொய்யான ஆவணங்களைக் காண்பித்து, கட்சி சார்பாகக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம் எம் ஸ்ரீவத்சவ் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்று வாரத்திற்குள் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அன்புமணியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜா, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் ஏற்கவேண்டும் எனவும், தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளும்படியும்  கோரிக்கை வைத்தார். ஆனால், ‘நீங்கள் எதிர் தரப்பினராக இல்லாத போது உங்களை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது’ என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எனவே, மாம்பழம் சின்னம் எந்த அணிக்கு உரித்தானது என்பது மூன்று வாரத்திற்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.