யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த சூழலில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததால், அந்த நிறுவனத்தை யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தலா 76 சதவீத பங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அசோசியட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை வெறும் ரூ.50 லட்சத்திற்கு அபகரிக்கும் நோக்கோடு ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் செயல்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி பாட்டியாலா ஹெள்ஸ் நீதிமன்றத்தில் புகார் மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த பணப் பரிமாற்றத்திற்கு மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும், காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சுமன் துபேவும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டதை தொடர்ந்து, ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தது. மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அபகரிக்க விரும்பியதாக அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று (16-12-25) ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி விஷால் கோகனே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘சுப்பிரமணிய சுவாமியின் புகாரின் அடிப்படையில் எந்தவொரு போலீஸ் துறையோ, சிபிஐயோ இது தொடர்பாக எந்தவிதாமான முதல் தகவல் அறிக்கையும் விசாரணை தொடங்கிய சமயத்தில் பதிவு செய்யவில்லை. அதற்குப் பிறகு சமீபத்தில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது’ என்று கூறி அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துள்ளார். இது தொடர்பாக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.