Court questions Are ordinary devotees made to wait in line during VIP darshan?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிவசுப்பிரமணிய பட்டர் உள்ளிட்ட 11 பட்டர்கள், தங்களுக்கு பூஜைகள் உள்ளிட்ட கைங்கரியங்களை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த மனுவில், விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று (21-10-25) வந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆ.சுவாமிநாதன், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரிசுதந்திரர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர். மேலும் பட்டர்கள், ஸ்தானியர்கள் ஆகிய பிரிவினரும் உள்ளனர். இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையால் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் கடிகார சுற்றும் திசையில் ஆகம விதிப்படி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தற்போது வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? அதற்கு ஏதும் நடைமுறை உள்ளதா?.
நீண்ட வரிசையில் இல்லாமல் விரைவாக சாதாரண பக்தர்கள் பொது தரிசன வரிசையில் செல்வதற்கு ஏதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?. விஐபி தரிசனத்தின் போது சாதாரண பக்தர்களை அந்த வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகிறதா? பிரேக் தரிசனம் என்ற முறையை அறிமுகப்படுத்தபோகிறீர்களா? இது போன்ற சூழலில் விஐபி தரிசனம், பிரேக் தரிசனம் உள்ளிட்ட எந்த ஒரு சிறப்பு தரிசனத்தின் போது சாதாரண பக்தர்கள் இடையூன்றி தரிசனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு என்னென்ன வழிமுறைகளை வகுத்துள்ளீர்கள்? என்னென்ன நடைமுறையில் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து கோயில் இணை ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.