Court quashes case filed by former Trichy DIG Varunkumar against Seeman
திருச்சி சரக டிஐஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வருண்குமார், ‘தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி டி.ஐ.ஜிஆக இருந்தவரும், சென்னையில் சிபிசிஐடி பிரிவின் டிஐஜியாக பணியில் தொடரும் வருண்குமார், சீமானுக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி எல்.விக்டோரிய கெளரி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Follow Us