திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியபுரம் அருகே காரியமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

அந்த போராட்டத்தின் போது ஓஎன்ஜிசி தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 22 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், பி.ஆர்.பாண்டியனை முதல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 18 பேருக்கு எதிராக எந்தவித ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை அடுத்து பி.ஆர்.பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, பி.ஆர்.பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், இந்த மனு இன்று (19-12-25) சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர்’ என்று வாதிட்டார். இவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் பி.ஆ.பாண்டியன் வெளியே வந்தார்.