வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா, காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அகமது, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினரின் காவலில் சித்திரவதை காரணமாக ஷமீல் அகமது இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அவரது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பேருந்துகள், காவல் வாகனங்கள், மதுபானக் கடை மற்றும் தனியார் மருத்துவமனையை சேதப்படுத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர் . இது தொடர்பாக 191 பேர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்க தேதி குறிக்கப்பட்டது. இது மத ரீதியான வழக்கு என்பதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்கூட்டியே தீர்ப்பு வந்தால் வேறு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் எனச்சொல்லி தீர்ப்பு தேதி ஆகஸ்ட் 28 ஆம் தேதி என மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி இன்று (28-08-25) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 161 பேர் ஏழு வழக்குகளில் இருந்து ஆறு வழக்குகளில் 161 பேர் விடுதலை செய்வதாக மாவட்ட நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கில் 22 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதேபோல் கவரத்தின்போது 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. அதற்கான நட்டயீட்டினை கலவரத்துக்கு காரணமான ஆம்பூர் தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏவான அஸ்லம்பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏவான அஸ்லம் பாஷா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இத்தீர்ப்பினை ஒட்டி திருப்பத்தூர் எஸ்பி சியாமளாதேவி மற்றும் வேலூர் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையில் இருப்பார்கள்.