உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி என்பவர், சமாஜ்வாதி கட்சியின் எம்.பியாக பதவி வகித்து வருகிறார். ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு, 4 மனைவிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், எம்.பி நத்விக்கும் அவருடைய 4வது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண், ஆக்ராவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், எம்.பி நத்வி தனது 4வது மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எம்.பி நத்வி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி சுபாஷ் சந்திர சர்மா முன்பு வந்தது. அப்போது எம்.பி நத்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் திருமண தகராறுடன் தொடர்புடையது என்றும், எனவே அதை சுமுகமாக தீர்க்க மனுதாரர் விரும்புவதாகவும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுகொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்திர சர்மா, ‘இந்த வழக்கு, மத்தியஸ்தம் மூலம் பிரச்சினையைத் தீர்க்க வாய்ப்பு உள்ளது. அந்த சாத்தியத்தை ஆராய முயற்சி எடுக்கப்பட வேண்டும். எனவே, இந்த பிரச்சனையில் ஒரு தீர்வை எட்டுவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையத்தை அணுக வேண்டும். இதனிடையே, எம்.பி நத்வி நீதிமன்றத்தில் ரூ.55,000 டெபாசிட் செய்ய வேண்டும். அதில், அவரது 4வது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும். நத்வி தேவையான வைப்புத்தொகையைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தற்போதைய பராமரிப்புத் தொகையைச் செலுத்தத் தவறினாலோ அல்லது மத்தியஸ்தம் தோல்வியடைந்தாலோ, இடைக்கால உத்தரவு தானாகவே முடிவுக்கு வரும்’ என எச்சரித்து உத்தரவிட்டார்.