Court orders Permission to light a lamp on Thiruparankundram hill
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய 2 வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இந்த மலையில், 2 வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளதால், மலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்தாண்டு கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் அல்லாமல் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்றத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை நீதிமன்றம் உறுதி செய்து ஒரு உத்தரவாக வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் ஒரு மனுதாரராக இணைத்து வழக்கை இன்று தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (01-12-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம், அரசு தரப்பு என பல்வேறு தரப்பின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கார்த்திகை திருநாளின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். அதற்கான முழுமையான பாதுகாப்பை மதுரை மாநகர காவல்துறை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
Follow Us