மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய 2 வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இது தொடர்பான விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

குறிப்பாகத் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு மற்றும் கோழிகளைப் பலியிடக்கூடாது என்று பல்வேறு மனுக்களும், அதே போன்று அங்கு ஆடு மற்றும் கோழிகளைப் பலியிடுவதற்கு எந்த இடையூறுகளையும் அரசு செய்யக்கூடாது என பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் உச்சி மலைப்பகுதியில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில் வருகிற 6ஆம் தேதி திருப்பரங்குன்றம் தர்காவில் சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், 6ஆம் தேதி நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் ஆடு கோழி பலியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மந்திரமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன்பு இன்று (26-12-25) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘ஏற்கெனவே நீதிபதிகள் மலை உச்சியில் ஆடு கோழி பலியிட தடை விதித்துள்ளனர். ஆனால் அது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் தற்போது இல்லை. இந்த சூழ்நிலையில் கந்தூரி விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விழாவின் போது ஆடு கோழி பலியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

Advertisment

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி ஜோதிராமன், சந்தனக்கூடு விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் மனு குறித்து தர்கா தரப்பினர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.