கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், கார்த்திகை தீபத் திருநாளான கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். மேலும் அவர்கள், காவல்துறையை மீறி மலையின் மீது ஏற முயற்சி செய்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.
இத்தகைய சூழலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, சிக்கந்தர் தர்கா தரப்பு மேலும் சில தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06-01-26) தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் கூறியதாவது, ‘இந்த வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
தீபம் ஏற்றுவதால் பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்கத்தக்கதல்ல. அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே தூண் உள்ளது. தீபம் ஏற்றும் பக்தர்களின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் ஏற்காதத்ற்கு நம்பத்தகுந்த காரணம் இல்லை. தீபம் ஏற்ற வேண்டும், சண்டை போடக் கூடாது. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும்’ என்று கூறி தீர்ப்பு வழங்கினர்.
மேலும் நீதிபதிகள், ‘மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும். அந்த மலை முழுவதும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறை அறிவுறுத்தலோடு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது. தீபமேற்றும் போது யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை தொல்லியல் துறை, தேவஸ்தான்ம் முடிவு செய்யலாம். தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம் ஒவ்வொரு கார்த்திகை தினத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாள் அன்று தான் மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டு தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/lampcourt-2026-01-06-11-26-24.jpg)