மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டம் மாலேகான் அருகே உள்ள பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா, முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டனன்ட் கர்னல் பிரசாத், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். 

இந்நிலையில் இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31.07.2025) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பில், “இரு சக்கர வாகனத்தில் குண்டு வைத்ததற்கான எந்த ஆதாரமும் ஸ்ரீகாந்த் புரோஹித்துடைய இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோன்று வெடிகுண்டு வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் ஷாத்விக்குச் சொந்தமான வாகனம் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

அதேபோல குண்டு வெடிப்பு தொடர்பாகச் சதித் திட்டம் தீட்டியதாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட 7 பேரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் 7 பேரும் வெடிகுண்டு வைத்ததற்கான ஆதாரத்தை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. இந்த வெடி குண்டி தாக்குதலில் காயமடைந்தவர்கள் 101 பேர் அல்ல. இந்தவெடிகுண்டு விபத்தில் 95 பேர் மட்டுமே காயமடைந்தனர். 

எனவே அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடர்பு இல்லை. இந்த 7 பேரும் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் இவர்கள் தான் குற்றம் செய்திருக்கிறார்கள், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார்கள் என்பது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் இந்த 7 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்”என உத்தரவிட்டுள்ளார்.