கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரியும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச். தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

Advertisment

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் கடந்த 3ஆம் தேதி (03.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது த.வெ.க. குறித்து நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இத்தகைய சூழலில்தான் த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கைது நேற்று முன்தினம் (12.10.2025) செய்யப்பட்டார். 

Advertisment

அதாவது நீதிபதி குறித்து அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி சாணார்பட்டி காவல்துறையினர் சார்பில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் நிர்மல்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மல்குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.