‘ஐ லவ் யூ’ என்று சொல்வது வெறும் உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே, பாலியல் நோக்கம் அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, 35 வயது நபர் ஒருவர் கையைப் பிடித்து சிறுமியின் பெயரைக் கேட்டு ‘ஐ லவ் யூ’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து 35 வயது நபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நாக்பூரில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டின் போது அவரை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி மற்றும் பால்கே ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டு விசாரித்த நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்ட சிறுமிவுடன் பாலியல் தொடர்பை ஏற்படுத்துவதே அந்த நபரின் உண்மையான நோக்கம் என்பதைக் குறிக்கும் எந்த சூழ்நிலையும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், ஆபாசமான சைகைகள் அல்லது ஒரு பெண்ணின் குணத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட கருத்துக்கள் ஆகியவையே பாலியல் செயலில் அடங்கும். இந்த வழக்கு பாலியல் வன்கொடுமையிலோ அல்லது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது.

தற்போதைய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் பாலியல் நோக்கத்துடன் ‘ஐ லவ் யூ’ என்று கூறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. யாராவது ஒரு நபரை காதலிப்பதாகக் கூறினாலோ அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாலோ, அது பாலியல் நோக்கத்தைக் காட்டும் நோக்கமாகக் கருதப்படாது. ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது வெறும் உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே, அது பாலியல் நோக்கம் அல்ல. ‘ஐ லவ் யூ’ என்று வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் பாலியல் நோக்கமாக கருதப்படாது’ என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்து உத்தரவிட்டது.