வீட்டு வேலைக்கு வந்த தம்பதி வீட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முதலாளி மற்றும் அவரது மகளை பட்டினி போட்டே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் சிங் (70). ரயில்வே துறையில் பணியாற்றிய சிங், 2015 ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2016 ம் ஆண்டு சிங்கின் மனைவி இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயது மகள் ரஷ்மியுடன் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் சமைப்பதற்காகவும், மகளை கவனித்துக் கொள்வதற்காகவும் ராம் பிரகாஷ் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி ராம் தேவி ஆகியோரை வேலைக்கு அமர்த்தினார். இவர்கள் ஆரம்பத்தில் சாதாரணமாக வேலை பார்ப்பது போல் தெரிந்தாலும் காலப்போக்கில் அந்த வீட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பிறகு சிங் மற்றும் அவரது மகளையும் வீட்டு சிறையில் அடைத்து விட்டனர். தரைத்தளத்தில் உள்ள அறையில் சிங் மற்றும் ரஷ்மியை அடைத்துவிட்டு, அந்த தம்பதியினர் மாடியில் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertisment

ஐந்து ஆண்டுகளாக  அறையில் அடைக்கப்பட்ட தந்தை மற்றும்  மகள் இருவரும் உணவு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் சிங் திங்கட்கிழமையன்று உயிரிழந்ததாக கிடைத்த செய்தியை கேட்டு சிங்கின் சகோதரர் அமர் சிங் ரத்தோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அங்கிருந்த காட்சிகளைக் கண்டு  அவர்கள் அதிர்ச்சியடைந்தார். இளம்பெண் ரஷ்மி எலும்புக்கூடான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார், பார்ப்பதற்கு அவர் 80 வயதான மூதாட்டியைப்போல் எலும்பும் தோலுமாக இருப்பதை கண்டு உறவினர்கள் வேதனை அடைந்தனர்.

இதற்குக் காரணம் வேலைக்கார தம்பதியின் சொத்தின் மீதான பேராசை தான் என்று அமிர்சிங் கூறினார். நாங்கள்  எனது சகோதரரை சந்திக்க வந்த போதெல்லாம் "அவருக்கு உங்களை சந்திக்க விருப்பம் இல்லையாம்" என்று கூறி இந்த தம்பதியினரே எங்களை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டனர்.  இவர்கள் சொத்தை அபகரிப்பதற்காக எனது சகோதரர் மற்றும் மகளுக்கு உணவளிக்காமல், அறையில் அடைத்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேலை சப்பாத்தி கொடுத்ததாக கூறுகிறார்கள். ஒரு சப்பாத்தி கொடுத்திருந்தால் கூட அவர்களின் நிலை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்று அமர்சிங் வேதனையடைந்தார்.

Advertisment

ஓம் பிரகாஷின் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது, ரஷ்மி ஒரு இருண்ட அறையில் நிர்வாண நிலையில் எலும்புக்கூடாகக் காணப்பட்டார், இந்தக் காட்சி மிகவும் வேதனையளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் ஓம் பிரகாஷ்  உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ததை அடுத்து, அவரது உடலை  காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலைக்கார  தம்பதி சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில், வீட்டின் உரிமையாளரை வீட்டு சிறையிலடைத்து உணவளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் உறவினர் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.