‘எனது காதல் கணவருடன் என்னைச் சேர்த்து வையுங்கள்...’ எனக் கூறி ஐடி ஊழியர், காதல் கணவருடன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த காயத்ரி (22), ஐடி ஊழியர். இவர் தன் காதல் கணவருடன் இன்று வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்

அந்த மனுவில், “பட்டதாரியான நான் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் கடந்த ஐந்து வருடங்களாக வேலூர், இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (23) என்பவரை காதலித்து வந்தேன். எங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எனக்கு வேறு இடத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், சென்னையில் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சென்னை சென்றேன். நேற்று திருவள்ளூர் அருகே உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு எனது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.