Advertisment

சாதி மறுப்பு திருமணம்; சுற்றி வளைத்த குடும்பத்தினர் - அடுத்தடுத்து நடந்த திகில் சம்பவம்!

1

தேனியைச் சேர்ந்தவர் இளம்பெண் சரண்யா. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். கோவையில் நர்சிங் படிக்கும்போதே, அதே கல்லூரியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த தேனியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது.

Advertisment

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி, சரண்யாவும் விக்னேஷும் வீட்டிலிருந்து வெளியேறி, தேனியில் உள்ள விநாயகர் கோவிலில் மாலை மாற்றி, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment

அதன்பிறகு, தற்போது இருவரும் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி, விக்னேஷ் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் சரண்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து, வீட்டின் கதவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த சரண்யா, வீட்டின் ஜன்னல் வழியாக யார் என்று பார்த்திருக்கிறார்.

அப்போது, சரண்யாவின் தந்தை ஆனந்தன், தாய் லதா, மாமா ஈஸ்வரன், அத்தை மகேஸ்வரி, அண்ணன் பிரகாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் விஜய், அதிபன் ஆகிய ஏழு பேர் வீட்டின் வெளியே நின்று கதவைப் பலமாகத் தட்டுவது தெரியவந்துள்ளது. இதனால் பயந்துபோன சரண்யா, கதவைத் திறக்காமல் வீட்டிலேயே அமைதியாக இருந்திருக்கிறார். ஆனால், விடாமல் கதவைத் தட்டிய அவர்கள், "இப்போது கதவைத் திறக்கிறாயா, இல்லை உடைத்து உள்ளே வரட்டுமா?" என்று எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், கதவைத் திறக்காததால், ஏழு பேரும் சேர்ந்து கதவைத் தட்டியதுடன், காலால் எட்டி உதைத்திருக்கின்றனர். இந்தச் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனையறிந்த அவர்கள், சரண்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சரண்யா, "சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், பெற்றோர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர்," என்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சரண்யாவின் பெற்றோர் உள்ளிட்ட ஏழு பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதி மறுப்புத் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு, பெற்றோர்களே கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

woman Coimbatore police Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe