ஒடிசாவில் காதல் திருமணம் செய்ததற்காகக் கொடுக்கப்படும் வித்தியாசமான தண்டனைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

ஒடிசாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது ராயகடா மாவட்டம். இந்த மாவட்டம், பழங்குடி மக்களின் கலாச்சாரம், இயற்கை அழகு, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது. அதே சமயம், பழங்கால கலாச்சாரம் என்று சில பிற்போக்கு பழக்கவழக்கங்களையும் இந்த மாவட்டத்தில் உள்ள சில கிராமவாசிகள் பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக இளம்பெண்ணின் குடும்பத்திற்கு மொட்டை அடித்து கோயிலில் சுத்திகரிப்பு சடங்கு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அதே மாவட்டத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு சடங்கு செய்யப்பட்டிருக்கிறது.

ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமாஜ்ரி கிராமத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அண்மையில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்த இளைஞர், பெண்ணின் தந்தை வழி அத்தை மகனாக இருப்பதால், இவர்களது திருமணத்திற்கு கிராமவாசிகளும் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உள்ளூர் வழக்கப்படி, இத்தகைய திருமணம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஊர் பழக்கவழக்கங்களை மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமவாசிகள், கூடி ஆலோசித்து இருவருக்கும் தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, ஊர் மக்கள் முன்னிலையில், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஏர் கலப்பை ஒன்றைத் தயார் செய்து, அதில் காதல் ஜோடியை மாடுகளைப் போல கயிற்றால் கட்டியுள்ளனர். பின்னர், அவர்களை மாடுகளைப் போல குச்சியால் அடித்து நிலத்தை உழ வைத்தனர்.

பெண் என்று கூட பார்க்காமல், சில ஆண்கள் அவரைக் குச்சியால் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்ற கிராமவாசிகள், ஒழுக்கத்தை மீறி நடந்ததாகக் கூறி சுத்திகரிப்பு சடங்கு செய்தனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள பழமையான பழக்கவழக்கங்கள், பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நல்ல பழக்கவழக்கங்களாகக் கருதப்பட்டாலும், பல பழக்கவழக்கங்கள் வளர்ந்து வரும் நவீன நாகரிகத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.