Advertisment

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்த ஜோடி; அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் - காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

1

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி பதற்றமாக ஓடி வந்த இளம்பெண்ணும் இளைஞரும், தாங்கள் விஷம் குடித்துவிட்டதாகவும், "எப்படியாவது எங்களது உயிரைக் காப்பாற்றுங்கள்" என்று அங்கிருந்த காவலர்களிடம் கதறி அழுதுள்ளர். உடனடியாக, அங்கிருந்த காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அந்த ஜோடியின் உயிரைக் காப்பாற்றும் வகையில், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை ஆட்டோவில் ஏற்றி குலசேகரப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், பரிதாபகரமாக, செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.

Advertisment

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதில், விஷம் அருந்திய அந்த ஜோடி திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த 28 வயது லாரி ஓட்டுநர் தங்கவேல் சாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது பார்வதி என்பவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், தங்கவேல் சாமிக்கு கஸ்தூரி தேவி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது எதிர் வீட்டில் வசித்து வந்த பார்வதியுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வதிக்கு ஆட்டோ ஓட்டுநரான சுப்பையா என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், தங்கவேல் சாமிக்கும் பார்வதிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.

இந்த உறவு வெளிச்சத்துக்கு வந்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கவேல் சாமி கயத்தாறு அருகே சாலைப் புதூருக்கு இடம்பெயர்ந்து, அங்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இருப்பினும், தங்கவேல் சாமியும் பார்வதியும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். இதனால், பார்வதியின் வீட்டில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால், தங்கவேல் சாமியுடனான உறவை கைவிட மனமில்லாத பார்வதி, ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, தங்கவேல் சாமியிடம் தஞ்சமடைந்தார்.

பின்னர், இருவரும் காரில் புறப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தனர். செப்டம்பர் 19 அன்று திருச்செந்தூருக்குச் சென்ற அவர்கள், அங்கு இரவு தங்கிவிட்டு, மறுநாள் பகல் நேரத்தில் குலசேகரப்பட்டினத்திற்கு காரில் வந்தனர். இதற்கிடையில், இரு குடும்பத்தினரும் அவர்களைத் தேடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆக்ரோஷமாக மிரட்டியதுடன், சாபமும் விட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தங்கவேல் சாமியும் பார்வதியும், "இனி இரு குடும்பத்தினரும் நம்மை சேர்ந்து வாழவிட மாட்டார்கள்; பிரிந்து வாழ்வதைவிட சேர்ந்து உயிரை மாய்ப்போம்" என்று முடிவு செய்துள்ளனர்.

Advertisment

குலசேகரப்பட்டினம் காவலர் குடியிருப்புக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்தபடியே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்திருக்கின்றனர். சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளவே, ஆபத்தைக் கண்டு பதறிய அவர்கள், காரை காவல் நிலையத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு, காரிலிருந்து இறங்கி, காவல் நிலைய வாசலுக்கு ஓடி வந்து, "நாங்கள் விஷம் குடித்துவிட்டோம், எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று கதறியது தெரியவந்தது.

திருமணத்தை மீறிய உறவால் இளைஞரும் இளம்பெண்ணும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம், குலசேகரப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து வலைதளங்களிலும் "காவல் நிலையத்துக்கு வந்த இருவரும் மரணம்" என்று செய்தி பரவியதால், காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, உண்மைத்தன்மை தெரியாமல் செய்தி பரப்ப வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உடனடியாக மறுப்பு தெரிவித்ததையடுத்து, பரபரப்பு தணிந்தது.

செய்தியாளர்  - எஸ்.மூர்த்தி

young girl police Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe