புதிதாகத் திருமணமான ஒரு தம்பதியினர், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இடையே ஏற்படும் சண்டையால் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் நபர் ஒருவரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு வைத்திருப்பதால் இவர்களுக்கிடையே உள்ள பிணைப்பை மேலும் அதிகப்படுத்தியது. அதன் காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

போபாலில் வசிக்கும் கணவருக்கு ஏற்கெனவே ஒரு செல்ல நாய், ஒரு முயல் மற்றும் ஒரு மீன் தொட்டி இருந்துள்ளது. அதே நேரத்தில் திருமணத்திற்கு பிறகு தனது செல்லப் பூனையை தன்னுடனே அந்த பெண் அழைத்து வந்துள்ளார். இருவரும் போபாலில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் செல்லப்பிராணிகளுக்கு இடையிலான மோதல்கள் தம்பதியினரிடையே சச்சரவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது பூனையைப் பார்த்து நாய் தொடர்ந்து குரைப்பதால் பூனை பயந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி சாப்பிட மறுப்பதாக மனைவி குற்றம்சாட்டி கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். அதே போல், மீன் தொட்டியின் அருகே பூனை அமர்ந்து வெகுநேரம் மீனைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நாயை நோக்கி வன்முறையில் இறங்குவதாகவும் கூறி மனைவியிடம் கணவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

செல்லப்பிராணிகள் தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததால் தம்பதியினரிடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து கோர முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறி குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு அக்டோபரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி, செல்லப்பிராணிகளுக்காக 8 மாதத்திலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

Advertisment