கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து கருக்கலைப்பு செய்த தம்பதியினரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள இந்திலி கிராமத்தின் மொசக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி ராதா, வீட்டிலேயே கருக்கலைப்பு மாத்திரைகளை வைத்துக்கொண்டு, கல்லூரி மாணவிகள், திருமணத்தை மீறிய உறவால் கர்ப்பமாகும் பெண்கள், மற்றும் பெண் குழந்தை வயிற்றில் இருக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட பலருக்கு அவற்றைக் கொடுத்து கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவத் துறையினருக்கு கிடைத்திருக்கிறது.

அதன் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாலினி, சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் குரலினியன், மருத்துவ ஆய்வாளர்கள், மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் குழு ஒன்று ராதாவின் வீட்டிற்கு விரைந்து சென்றது. அங்கு அதிரடியாக சோதனை நடத்தியபோது, முதலில் எந்தப் பொருளும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், புகாரின் உண்மைத்தன்மையைக் கருதில் கொண்டு, வீட்டை சல்லடை போட்டு தேடினர். அப்போது, வீட்டின் பின்புறம் இருந்த கழிவுநீர் தொட்டிக்கு அருகே ஒரு ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, மருத்துவ அதிகாரிகள் அந்த ரகசிய அறையைத் திறந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 9 அட்டைப்பெட்டிகளில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகள், அலோபதி சிகிச்சைக்கான ஊசி மருந்துகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். பின்னர், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மருத்துவ அலுவலர் குரலினியன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ராதாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

விசாரணையில், ராதா நூற்றுக்கணக்கானவர்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, கருவிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, ராதா மாத்திரைகள் கொடுத்து சிசுக்கொலை செய்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, ராதாவின் கணவர் முருகேசன், ஸ்கேன் கருவி மூலம் சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறிந்து தெரிவிக்கும் செயலைச் செய்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஒரு கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறிந்து தெரிவித்ததாகக் கூறி, அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் பெரும் தொகையைச் செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முருகேசன் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறிந்து தெரிவிப்பதும், அவரது மனைவி ராதா மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்வதும் என்று, பல ஆண்டுகளாக இந்தச் சட்டவிரோத செயலைச் செய்து வந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.