திருமணத்தை மீறிய உறவால் கணவனும் மனைவியும் சேர்ந்து இளைஞர் ஒருவரின் தலையை துண்டாக்கி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் ரிந்த் நதி அருகே கடந்த ஜூலை 9ஆம் தேதி மனித தலை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர் மக்கள், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த தலையை மீட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் 32 வயதான ராகுல் படேல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ராகுல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ராகுல் படேல் ஏற்கெனவே திருமணமான 38 வயதான சரிதா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சரிதாவின் கணவர் ராம்பவன் (40) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர், தனது மனைவி சரிதாவை கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து சரிதாவும், ராம்பவனும் ராகுலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஜூலை 2ஆம் தேதி ராகுலை தனது வீட்டிற்கு சரிதா அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் உள்ளே நுழைந்ததும், ராம்பவன் ராகுலை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அதன் பின்னர், தம்பதியினர் சேர்ந்து அரிவாள் மற்றும் ரம்பம் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி ராகுல் உடலை துண்டு துண்டாக வெட்டினர். இந்த கொலையை மறைப்பதற்காக ரிந்த் நதி அருகே உடல் பாகங்களை எரித்து தலையை மட்டும் தூக்கி வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் அடிப்படையில், சரிதா மற்றும் ராம்பவான் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று தலை இல்லாத மற்ற உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர்.