திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலைப்பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் மது அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ராஜா தலைமையில் கலால் போலீசார் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வழுதலம்பட்டு பகுதியில் கலால் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதேபகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அனுமன் (60) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது விறகு வைக்கும் இடத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் கலால் போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதூர் நாடு மலைப்பகுதியில் உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் வனவிலங்கு வேட்டையாடி வருவதாகவும சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் புதூர்நாடு மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவ்வாது மலை கல்வராயன் மலைப்பகுதிகளில் மக்களிடம் வேட்டைக்காகவும் பாதுகாப்புக்காகவும் பலரும் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து இருக்கின்றனர் மலைகளில் மட்டும் சுமார் இந்த இரண்டு மலைகளில் மட்டும் 500 க்கும் அதிகமான நாட்டுத் துப்பாக்கியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.மலைப்பகுதியில் உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.