உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. இது, சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாகக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, உலக அளவில் பல நாடுகளில் சமூக ஊடகங்களைக் குறைந்த வயதுடைய சிறுவர்கள் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியா தான் உலக அளவில் தடை விதித்த முதல் நாடாகும்.
இந்த நிலையில், துபாயில் நேற்று முன்தினம் (03.02.2026) உலக அரசுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கலந்துகொண்டு பேசினார். அதில், ஸ்பெயின் நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து தங்கள் நாட்டு அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், ஆபாசப் படங்கள், தகாத விஷயங்கள், வன்முறை மற்றும் அடிமையாதல் போன்ற செயல்களுக்கு சமூக ஊடகங்கள் இடமளிக்கின்றன. இதனை, நம்மால் நீண்ட காலத்திற்கு ஏற்க முடியாது. இந்த, " இணையதள தீங்கிலிருந்து நாம் நமது சிறுவர்களையும் அவர்களது எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறினார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா தடை விதித்துள்ள நிலையில், தற்போது டென்மார்க் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் தங்களுடைய நாடுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பினை நிர்ணயிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. அதே நேரத்தில், இங்கிலாந்திலும் 16 வயதிற்குப்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனினும் இந்த நடைமுறைகளைக் கொண்டு வருவதால் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை என சமூக ஊடக நிறுவனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/social-media-2026-02-05-07-58-59.jpg)