புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில், கடந்த 2021-ஆம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளம்பர் தொழிலாளியான சந்தோஷ் (38) என்பவரை, உருளையன்பேட்டை காவலர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். வழக்கின் இறுதி விசாரணை இன்று நிறைவடைந்து, குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க, புதுவை அரசுக்கு நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.