வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான ஹேமராஜ். இவர் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் இருந்து ரயிலில் வந்த 24 வயது இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்துக்கொண்டார். தொடர்ந்து, அப்பெண்ணை வேலூர் டவுன் ரயில் நிலையம் - காட்பாடி இடையே ஜாப்ராபேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பான வழக்கு, கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஹேமராஜுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

முன்னதாக, ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் திருப்பூரில் ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி சித்தூரில் உள்ள தனது தாயைப் பார்க்க நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண் கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயிலில், பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

மேலும் இன்டர்சிட்டி விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த பொழுது மகளிர் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர். பின்னர் அந்த கர்ப்பிணி பெண் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த ஹேமராஜ், அந்த கர்ப்பணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை வேலூர் கே.வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisment

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஹேமராஜை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம், ஹேமராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 18 ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஹேமராஜுக்கு, தற்போது செல்போன் பறிப்பு வழக்கில் 15-ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.