Controversy over Sengottaiyan's post at Does TVK accept Jayalalithaa?
தமிழகம் முழுவதும் இன்று (03-12-25) கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, அனைவரும் தங்களது வீட்டில் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும். சுமார் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபத்தை கண்டு வழிபட ஏராளமான பக்தர்கள், இன்று திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/ja-2025-12-03-17-45-00.jpg)
இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.எஸ்.செங்கோட்டையன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தீமையில் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும், அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து மடல் புகைப்படத்தில், தவெக கொள்கை தலைவர்களோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இடம்பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது, அவரது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்துவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய போது, இங்கு ஜனநாயகம் இருக்கிறது. யார் புகைப்படம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, தவெகவில் பதவி கிடைத்த பிறகு தவெக நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அவர் மரியாதை செலுத்தினார். அதிமுகவில் இருந்து வந்ததால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் சென்றார். இதுவே திமுகவில் இருந்து யாராவது வந்தால் கலைஞர் நினைவிடத்திற்குச் செல்வீர்களா? அவரின் புகைப்படத்தை பயன்படுத்துவீர்களா? என்ற தவெகவினரை நோக்கி கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், தவெகவில் இணைந்த பிறகு, செங்கோட்டையன் தொடர்ச்சியாக ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்துவது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜெயலலிதாவை கொள்கை தலைவராக தவெக ஏற்கிறதா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
Follow Us