தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏவுக்கு எதிராக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள விவகாரம் ஆந்திரப் பிரதேச மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கோவூர் பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏ பிரசன்ன குமார் ரெட்டி கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது கோவூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டியை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, “பிரசாந்தி ரெட்டி தனது கணவர் எம்.பி வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினார். தூக்கத்தில் இருக்கும் போது பிரபாகர் ரெட்டிக்கு பிரசாந்தி ரெட்டி விஷம் கூட கொடுக்கலாம். திருமணத்திற்குப் பிறகு பிரபாகர் ரெட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பிரபாகர் ரெட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மக்கள் உங்களை ஒரு பணக்காரர் என்றும் புத்திசாலி என்று நினைக்கிறார்கள். நீங்கள் கவனமாக இருங்கள். உங்கள் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ நீங்கள் கொல்லப்படலாம். ” என்ற அவதூறான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார்.
இதனை கேட்டு கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. கோவூர் தொகுதி முழுவதும் இந்த விவகாரம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்ன குமார் கோவூர் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி பெண்கள் வீதிகளில் இறாங்கி போராடத் தொடங்கினர். இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் பெண் தலைவர்கள், பிரசன்ன குமார் மீது கோவூர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், பிரசன்ன குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரசன்ன குமாரின் இந்த பேச்சுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், ஜன சேனா தலைவரும் துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நெல்லூர் சாவித்திரி நகரில் உள்ள பிரசன்ன குமார் ரெட்டியின் வீட்டை நேற்று முன் தினம் (07-07-25) இரவு அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இரண்டு கார்களை உடைத்து, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீட்டில் இருந்து சில பொருட்கள் திருடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடித்துள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் தெலுங்கு தேசம் கட்சியினர் எனவும், எம்.பி வேமிரெட்டி பிரபாகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் ஆந்திரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.