Controversy over Natyanjali festival at Nataraja temple
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் நடைபெறும் நாட்டியஞ்சலி விழாவைச் சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்களிடம் ரூ.60 ஆயிரம் பெற்றுக் கொண்டு, விழா மேடையில் ஆட விடாமல் கோயிலின் தெற்கு கோபுரம் அருகே ஆட வைத்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைரலாகி வருகிறது.
1981 முதல் 2014 வரை 33 ஆண்டுகள் சிதம்பரம் நாட்டியஞ்சலி அறக்கட்டளை சார்பில் கோயிலில் விழா நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின், பின்னர் 2015 முதல் கோயில் தீட்சிதர்கள் நிர்வாக பொறுப்பேற்று, தில்லை நாட்டியஞ்சலி அறக்கட்டளை மூலம் விழாவை நடத்தி வந்தனர். 2022 முதல் விழா நிறுத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு மகா சிவராத்திரி தினத்திலிருந்து ஆயிரம் கால் மண்டபம் அருகே 7 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு நாட்டியப் பள்ளி மூலம் கோயில் தீட்சிதர் ஒருவரிடம் அனுமதி கோரி ரூ.60 ஆயிரம் வழங்கியதாக இலங்கை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறாததால், விழா மேடையில் ஆட அனுமதி வழங்கப்படாமல், தெற்கு கோபுரம் அருகே மட்டுமே ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லை நாட்டியஞ்சலி அறக்கட்டளை நிர்வாகி ஐயப்பன் தீட்சிதர், “சம்பவம் உண்மைதான். ஆனால் அறக்கட்டளைக்கு சம்பந்தமில்லை. நாங்கள் எந்த பணமும் பெறவில்லை. கோயில் தொடர்புடைய ஒருவரே பணம் பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. புகார் கோயில் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் வருத்தமடையாமல் இருக்க தெற்கு கோபுரம் அருகே ஆட ஏற்பாடு செய்தோம்” என்றார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us