மகாராஷ்டிரா அரசு நடத்திய விழாவில் வெள்ளி தட்டுகள், ஒரு வேளை உணவு ரூ.5,000க்கு பரிமாறப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மும்பையில் உள்ள விதான் பவன் வளாகத்தில் நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 70வது ஆண்டு விழா நடைபெற்றது. 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட இரண்டு நாள் விழாவில், நாடு முழுவதும் இருந்து சுமார் 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு வேளைக்கு ரூ.5,000 மதிப்புள்ள உணவுகளை வழங்கியதாகவும், தலா ரூ.550க்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட வெள்ளி உணவுத் தட்டுகளில் பரிமாறியதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும் போது வெள்ளித் தட்டுகளில் விருந்தினர்களுக்கு உணவளித்து ஆடம்பரமாக செலவழித்தது ஏன் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.