மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று (30-06-25) காலை 10 மணியளவில் சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வெறும் 40 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 50 சதவீத மாமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் வெறும் 40 கவுன்சிலர்களே கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், மாமன்றக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது ஒரு சில கவுன்சிலர்கள் செல்போனை பயன்படுத்தியபடியும், சிலர் ரீல்ஸ் பார்த்தப்படியும் அமர்ந்திருந்தனர். பொதுமக்களின் குறைகளையும், பொதுமக்களுடைய கோரிக்கைகளை மட்டுமே கூட்டத்தின் பேச வேண்டும் என்றும், செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் செல்போன் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.