கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற் கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது.

இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

சித்தராமையா முதல்வராக சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் பதவிக்கான விவாதம் கர்நாடகா காங்கிரஸுக்குள் எழுந்துள்ளது. தலைமை பதவி தொடர்பாக டி.கே.சிவக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கருத்து ஒன்றை கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இக்பால் உசேன், “டி.கே.சிவக்குமார் 200% நிச்சயமாக முதல்வராக வருவார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களுக்கு மேல் பெற்று சிவக்குமார் தலைமையில் அரசாங்கம் அமையும். இது கடவுள் மகாதேவப்பா மீது சத்தியம்” என்று கூறினார். இவரது பேச்சுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான பி.ஆர் பாட்டீல், சித்தராமையா குறித்து தனது நண்பர்களிடம் தொலைப்பேசியில் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, ‘சித்தராமையா அதிர்ஷ்ட லாட்டரியில் சிக்கி முதல்வரானார். நான் தான், அவரை சோனியா காந்திக்கு அறிமுகப்படுத்தினேன். அவருடைய அதிர்ஷ்டம் நன்றாக இருந்தது, அதனால், அவருக்கு அந்த பதவி கிடைத்தது. அவரது வெற்றிக்கு சாதகமாக கிரகம் இருந்துள்ளது. ஆனால், எனது சொந்த அரசியல் பயணத்தில் இது போன்ற அதிர்ஷ்டம் இல்லை. பாருங்கள், நமக்கு ஒரு காட்பாதர் இல்லை. உண்மையில், நமக்கு கடவுளோ (God) தந்தையோ (Father) இல்லை. நான் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவைச் சந்தித்து எனக்கு தேவையான அனைத்தையும் சொன்னேன். அவர், நான் சொல்வதை பொறுமையாக கேட்டார், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’ என்று எதிர் முனையில் இருப்பவரிடம் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.