பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பெண்களுக்காக காங்கிரஸ் அறிவித்த நலத்திட்டம் ஒன்று பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் ஆட்சிக்கு சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு 5 லட்சம் நாப்கின்களை விநியோகிப்பதாகவும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் போன்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ‘பிரியதர்ஷினி உதான் யோஜனா’ என்று அழைக்கப்படும் நாப்கின் வழங்கப்படும் முயற்சி, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதில் காங்கிரஸ் அறிவித்த நாப்கின் பாக்கெட்டுகளில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் புகைப்படத்தை எங்கு பயன்படுத்துவது என்று காங்கிரஸுக்கு தெரியவில்லை என்று பா.ஜ.க விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து பா.ஜ.க தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டரி கூறுகையில், ‘சானிட்டர் பேட் பாக்கெட்டுகளில் ராகுல் காந்தியின் புகைப்படம் இருப்பது பீகார் பெண்களை அவமதிக்கும் செயலாகும். காங்கிரஸ் ஒரு பெண்கள் விரோத கட்சி. பீகார் பெண்கள், காங்கிரஸுக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.