தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் படப்பனார்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் பார்த்திபன் (வயது 27). டிப்ளமோ படித்த இவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளும் எழுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். கீரமங்கலம் மின்வாரியத்தின் பணிகளும் செய்து வருவார். மேலும் தீவிர விஜய் ரசிகரான பார்த்திபன் விஜய்யின் த.வெ.க கட்சி தொடங்கியதும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர் விஜய் நடத்திய கட்சி மாநாடுகளிலும் தவறாமல் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (27.09.2025 - சனிக்கிழமை) விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கீரமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட மேற்பனைக்காடு மேற்கு பகுதியில் மத்திய அரசின் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் வடமாநில தொழிலாளர்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த புதிய மின்மாற்றியை மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலைலயில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த தொடக்கவிழா நடந்து முடிந்ததும் அனைவரும் களைந்து சென்றுள்ளனர். அப்போது தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர் யாரோ அங்கு நின்ற ஒப்பந்த ஊழியர் பார்த்திபனை அழைத்து சோதனைக்காக மின் கம்பியில் இணைத்துள்ள மின் ஒயர்களை அகற்றக் கூறியதால் மின்மாற்றியின் மின்கம்பத்தின் மேலே ஏறி ஒயர்களை அகற்ற முயன்றார்.
அப் போது அவருக்குப் பின்னால் சென்ற மின் கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அதில் வரும் மின்சாரம் தன்னை தாக்கப் போவதை அறிந்து நிலை தடுமாறி முன்னால் சென்ற மின்கம்பியை பிடித்துவிட்டார். அந்தக் கம்பியிலும் மின்சாரம் வந்ததால் பார்த்திபன் மின்சாரம் தாக்க தொங்கியுள்ளதைப் பார்த்து சக ஊழியர்கள் வேகமாக மின்மாற்றியில் மின்சாரத்தை நிறுத்திய பிறகு கீழே விழுந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்களும், ஒப்பந்த ஊழியர்களும் சாலை மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு இல்லாத நிலையில் ஒப்பந்த ஊழியரை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் இரு பக்கமிருந்தும் மின்சாரம் வரும் மின்கம்பத்தில் ஏறச் சொன்னதால் தான் இந்த உயிரழப்பு நடந்துள்ளது. பார்த்திபன் வயதான தாய் தந்தை, கல்லூரியில் படிக்கும் தங்கை என அவரது குடும்பமே இவர் வருவாயை வைத்தே குடும்பம் வாழ்ந்துள்ளது. இப்போது பார்த்திபனின் இறப்பு அந்த குடும்பத்திற்கு பேரிழப்பு. ஆகவே உரிய இழப்பீடும் அவரது குடும்பத்தில் அவரது தங்கைக்கு அரசு வேலையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு வேலைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து இன்று (28.09.2025) பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பார்த்திபன் உடல் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மின் ஒப்பந்த ஊழியரின் இழப்பால் அந்த குடும்பமே கேள்விக்குறியாக நிற்கிறது.