கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது நான்காவது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த மூன்று நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கன அடியாக உள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 116.86 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து காலை நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் தொடர்ந்து சில நாட்கள் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்தால் மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை மேட்டூர் அணை மீண்டும் நிரம்பினால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.