வரலாற்று சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்திய கோட்டைகளில் வேலூர் கோட்டையும் ஒன்று. இந்த கோட்டை வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வேலூரின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த கோட்டை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் பல ராஜவம்ச கைதிகளை இக்கோட்டையில் உள்ள அரண்மனையில் சிறை வைத்திருந்தனர். கண்டி மன்னர் விக்கிரமராஜாசிங்கன் மற்றும் திப்பு சுல்தான் குடும்பத்தினர் இங்கு அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புகழ்பெற்ற இந்த கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோட்டையின் மற்றொரு சிறம்பம்சமாகவும், கோட்டைக்கு பாதுகாப்பு வேலியாகவும் அகழி அமைந்துள்ளது. அகழியை சுற்றிலும் பூங்காக்கள் உள்ளன. அதில் பெரியார் பூங்காவில் பொதுமக்கள் சென்று பொழுதுபோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பெரியார் பூங்கா அருகே உள்ள அகழியின் தடுப்புச்சுவர் திடீரென இடிந்து அகழியில் விழுந்துள்ளது. அங்குள்ள மின்விளக்குகளும் அகழிக்குள் விழுந்துள்ளது. இதை தொல்லியல் துறை உதவிப்பொறியாளர் ஈஸ்வரன் மற்றும் கோட்டையின் பராமரிப்பு அலுவலர் கோகுல் (பொறுப்பு) ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் அங்கு பொதுமக்கள் யாரும் அருகில் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகையும், கம்புகளால் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது.தண்ணீர் அதிகமாக உள்ளதால் சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மழைக்காலம் முடிந்த பின்னர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.