விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று (21.07.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே விபத்தில் ஒரு ஆண் தொழிலாளர் மற்றும் 2 பெண் தொழிலாளர்கள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகரில் வெடி விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவங்கள் தொடர்பான வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்து நிகழ்வதும், இதனால் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும் வேதனை அளிப்பதாக தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலைகள் முறையான உரிமம் பெற்று இயங்குகிறதா? பாதுகாப்பு விதிமுறைகள் அங்கு பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வெடிபொருட்கள் கட்டுப்பாட்டில் பிரநிதித்துவம் பெற்ற ஒருவருடைய தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைத்திருந்தது.

Advertisment

இன்று (22/07/2025) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, 'பட்டாசு ஆலைகளை பொறுத்தவரை ஆய்வுக்கு அதிகாரிகள் போகும்போது ஆலையின் உரிமையாளர்கள் சிலர் உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் மூடிவிட்டு சென்று விடுகின்றனர்' என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

இதனைக் கேட்ட தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு, 'இந்த வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர் நலத் துறையையும் கூடுதலாக எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என தெரிவித்ததுடன், அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் பொழுது உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடக் கூடிய செயல்களில் ஈடுபடுவது என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்று ஒத்துழைப்பு அளிக்காமல் செயல்படும் ஆலைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை என்பதன் அடிப்படையில் 46 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .