வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சீனாவில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு கப்பல் மூலம் ஒரு கண்டெய்னரில் இ-சிகரெட் கடத்திவரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisment

அதனடிப்படையில் துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சீனாவில் இருந்து கப்பல் மூலம் வந்த 20 அடி நீளம் கொண்ட ஒரு கண்டெய்னரில் அதிரடிச் சோதனை நடத்தினர். சோதனையிட்டபோது முன்பகுதியில் பெயரளவுக்கு சில குடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின்புறம் வரிசையாக இ-சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடியே 50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

கண்டெய்னர் மூலம் நடக்கும் கடத்தல்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம் சிறு சிறு படகுகள் மூலம் நடக்கும் கடத்தல் சம்பவங்கள் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 81 மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட 2,835 கிலோ பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு 50 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதில் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறதா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.