அண்மையாகவே தமிழகத்தில் பேருந்துகள் விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் இடைகால் என்ற இடத்தில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனையடுத்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகேயுள்ள திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் 30-11-25 அன்று மாலையில் இரு அரசு பேருந்துகள், நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் சென்று அந்த வழியில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த 2 கார்களின் மீது மோதியதால் கார்களில் பயணம் செய்த 9 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படியாக பேருந்து விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் மற்றுமொரு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொடைரோடு அருகே உள்ள காமலாபுரம் பிரிவில் உள்ள நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது. 50 கிலோ எடை கொண்ட 300 துவரம் பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பழனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் மோதியது.
இதில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. லாரில் இருந்த பருப்பு முட்டைகள் சாலையில் சிதறிக் கொட்டியது. இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தம் அந்த பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியது. பேருந்தில் சுமார் 40 பேர் இருந்துள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தப்பியுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்தும் கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/207-2026-01-02-17-36-30.jpg)