தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதே சமயம் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்து திமுக சார்பில் இரு நாட்களில் குழுவை அறிவிக்க உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் மூத்த அமைச்சர்கள், திமுகவின் மாநில நிர்வாகிகள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

cpim-pal-mks-speech
கோப்புப்படம்

மற்றொருபுறம் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக உள்ள 15 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளைத் திமுகவிடம் கேட்டுப் பெறுவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

கடந்த முறை கோவில்பட்டி, திருப்பரங்குன்றம், அரூர், திண்டுக்கல், கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை என 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் கீழ்வேளூர் மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் வகையில் தொகுதிகளைக் கேட்டுப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள மதுரவாயல் அல்லது பெரம்பூர் தொகுதியைக் கேட்டுப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. 

anna-arivalayam-1

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அல்லது கிள்ளியூரில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக உள்ளதாகக் கூறப்படும் திருப்பூர் வடக்கு அல்லது திருப்பூர் தெற்கு, கோவையில் ஒரு தொகுதி, மதுரை மேற்கு அல்லது திருப்பரங்குன்றம், நன்னிலம், திண்டுக்கல்  ஆகிய 15 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள கீழ்வேளூர் மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதியை மீண்டும் கேட்டுப் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.