தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் இதுவரை ஆங்கில மொழியில் மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, தமிழ் வழியிலும் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அரசு, பல ஆண்டுகளாக பரிசீலிக்காமல் இருந்து வந்தது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து, சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 2025-ல் அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது. இந்த உத்தரவு நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளருக்கு மே 2025-ல், அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இதுவரை நெடுஞ்சாலைத்துறையில் தமிழ் வழியில் திட்ட மதிப்பீடு தயாரிக்க பொறியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Advertisment

இதனால், வேறு வழியில்லாமல், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவமதிப்பு வழக்குத் தொடர தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரிமுத்து நம்மிடம் தெரிவித்துள்ளார்.