கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ளது ஜம்பை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம் போல இன்று (08.09.2025) மதியம் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் வழங்கப்படும் உணவை மாணவர்கள் பள்ளியிலேயே உண்பதும் சிலர் வீடுகளுக்கு கொண்டு சென்று உண்பதும் வழக்கம். அப்போது ஆறாம் வகுப்பு மாணவன் சாப்பிட்ட உணவில் பல்லி எலும்பு கூடாக இருந்ததாக கண்டு அதிர்ச்சி அடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உணவை உட்கொண்ட அனைத்து மாணவர்களையும் அருகில் உள்ள மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். 

Advertisment

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 4 ஆம்புலன்ஸ் மற்றும் டெம்போ ட்ராவலர் வாகனம் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவுக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் குவிந்ததால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் அனைவரும் முதல் தளத்தில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சைகளை 10 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகளை கேட்டு அறிந்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ  சிகிச்சைகளையும் துரிதப்படுத்தினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஆட்சியர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்த பொழுது மாணவர்கள் அனைவரும் நலமுடன் நிலையாக உள்ளதாகவும் தெரிவித்தார். இருந்தபோதிலும் மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.