வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 30 ஆம் தேதி சீனாவில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு கப்பல் மூலம் ஒரு கண்டெய்னரில் இ-சிகரெட் கடத்திவரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இ-சிகரெட் என்பது பேட்டரி பொருத்தப்பட்ட லைட்டர் போன்ற கருவியில் நிக்கோட்டின் திரவத்தை நிரப்பி புகைப்பதாகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இ-சிகரெட்டை ஆயிரக்கணக்கான முறை புகைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் சாதாரண சிகரெட்டைவிட இ-சிகரெட்டையே அதிகம் விரும்புகின்றனர்.
ஆனால் இ-சிகரெட் புகைப்பது உடல்நலத்துக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, விநியோகம் ஆகியவை முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சீனாவில் இருந்து கப்பல் மூலம் வந்த 20 அடி நீளம் கொண்ட ஒரு கண்டெய்னரில் அதிரடிச் சோதனை நடத்தினர். அதில் தனியார் நிறுவனத்திற்கு குடைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகள் அந்தக் கண்டெய்னரை திறந்து சோதனையிட்டபோது முன்பகுதியில் பெயரளவுக்குச் சில குடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.ஆனால் அதன் பின்புறம் வரிசையாக இ-சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கிவைத்து கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடியே 50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/5-2025-12-03-17-41-23.jpg)
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளிநாட்டில் கட்டிட ஒப்பந்ததாரராகப் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த 42 வயதான நாகராஜ், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் 46 வயதான ராஜ்குமார், கடல் வர்த்தக நிறுவனம் நடத்திவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் 56 வயதான சுவாமிநாதன் ஆகியோர் சீனாவில் இருந்து குடைகளை இறக்குமதி செய்வதாகக் கணக்குக் காட்டி இ-சிகரெட் கடத்திவந்ததும், அவற்றைத் தூத்துக்குடி வழியாக சென்னைக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துப்புத் துலக்கி கடத்தலில் தொடர்புடைய சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று தொழிலதிபர்களையும் அதிரடியாகக் கைதுசெய்தனர். அவர்களைத் தூத்துக்குடிக்கு அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு தொழிலதிபரைத் தேடி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பிலான இ-சிகரெட் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us