தமிழக காவல்துறையின் இயக்குநராக (டிஜிபி) இருந்த சங்கர் ஜூவாலின் பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய டிஜிபியைத் தேர்வு செய்ய, பணி மூப்பு அடிப்படையிலான அதிகாரிகளின் பட்டியலை மூன்று மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், முறைப்படி அதனைக் கடைப்பிடிக்காமல், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் அதற்கான பட்டியல் அனுப்பப்பட்டது. அதே சமயம், சங்கர் ஜூவால் ஓய்வு பெற்றதால், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் (ஐ.பி.எஸ்.)-ஐ நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நியமனம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகச் சர்ச்சைகள் வெடித்தன. ஆனால், தமிழக அரசும் உயரதிகாரிகளும் இது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு மாறாக, பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதால், இந்த நியமனத்தை எதிர்த்து 'மக்கள் கண்காணிப்பக அமைப்பின்' தலைவரான வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை விரைவாகப் பரிசீலித்து, 3 பேர் பட்டியலை யூ.பி.எஸ்.சி. இறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதையடுத்து, யூ.பி.எஸ்.சி.யின் உயர்மட்டத் தேர்வுக் குழு இன்று (26-ம் தேதி) டெல்லியில் கூடுகிறது.
யூ.பி.எஸ்.சி.யின் உயர்மட்டக் குழுவில், யூ.பி.எஸ்.சி.யின் தலைவர், மத்திய உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக கேடரைச் சாராத மத்திய ஆயுதப்படையின் தலைமை அதிகாரி அந்தஸ்திலுள்ள ஒரு அதிகாரி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். பொதுவாக, புதிய டிஜிபியைத் தேர்வு செய்யும் உயர்மட்டக் குழுவில், தமிழக டிஜிபியும் இடம்பெறுவார். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பாக முறைப்படி பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைக்காத நிலையில், சங்கர் ஜூவால் ஓய்வு பெற்றபிறகு இந்தக் குழுவின் கூட்டம் நடப்பதால், சங்கர் ஜூவால் இடம்பெறவில்லை. அதே சமயம், பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன் இந்தக் குழுவில் இடம்பெற வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போது வெங்கட்ராமனின் பெயரும் யூ.பி.எஸ்.சி.க்கு அனுப்பிய அதிகாரிகளின் பட்டியலில் இருப்பதால், உயர்மட்டக் குழுவில் அவரது பெயர் இல்லை.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் 2 அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதில் தமிழக அரசின் விருப்பம் நிறைவேறுமா? என்ற கேள்வி ஐ.பி.எஸ். வட்டாரங்களில் எதிரொலித்தபடி இருக்கிறது. பணி மூப்பு அடிப்படையில், தற்போது 1990 முதல் 1994-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலில் சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூன்று பேர் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர். இதனையடுத்து, வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, சஞ்சய் மாத்துர் ஆகிய அதிகாரிகள் இருக்கின்றனர்.அதே சமயம், பிரமோத் குமார், அபய்குமார் சிங் ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால், தேர்வுப் போட்டி பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெறவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், இன்று கூடும் உயர்மட்டக் குழு, தகுதி படைத்த 3 அதிகாரிகளின் பெயர்களைத் தேர்வு செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒரு அதிகாரியை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார். இந்த நிலையில், வெங்கட்ராமனையே புதிய டிஜிபியாகக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வைத்துள்ள தமிழக அரசு, அதற்குத் தோதாக முதல் 3 இடத்தில் உள்ள அதிகாரிகளுக்கு எதிரான சிக்கல்களை உயர்மட்டக் குழுவில் விவரித்து, தனது திட்டத்தைச் சாதித்துக்கொள்ளுமா? தமிழக அரசு வைக்கும் வாதங்களை உயர்மட்டக் குழு ஏற்குமா? என்ற பரபரப்பு அதிகாரிகள் மத்தியில் பரவி வருகிறது.