தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - வி.சி.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று (02.03.2026) நடைபெற்றது. அதில் கடந்த முறை 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, இந்த முறை 12 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “டி.ஆர். பாலு தலைமையிலான திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினரோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும், கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றோம். 

Advertisment

2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வழக்கமான சராசரியான ஒரு பொதுத்தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடு இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அங்கம் என்கிற உரிமை உணர்வோடு எங்கள் (வி.சி.க.) கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். வி.சி.க., திமுகவோடு ஒரு பேரம் பேசுகிற கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டுக்கான வெற்றி. தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதி அரசியலுக்கான வெற்றி என்கிற புரிதலோடு வி.சி.க.வுக்கான அதிகார பகிர்வு குறித்து வி.சி.க.வின் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டோம். 

Advertisment

திமுக தரப்பில் வி.சி.க.வின் கருத்துக்களை கேட்டுக்கொண்டார்கள். திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் உடன் இது குறித்து விவாதித்த பின்னர் உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் சிறப்பான முறையில் நடந்தேறியிருக்கிறது. பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் திமுக குழுவுக்கு நாங்கள் தெரியப்படுத்தி இருக்கிறோம். அந்த எண்ணிக்கை உறுதியான பிறகு தெரிவிப்போம்

vck-mla-mks-udhay
கோப்புப்படம்

ராஜ்யசபா பற்றி நாங்கள் பேசவில்லை. புதுச்சேரியிலும் எங்களுக்கு இடம் வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அதில் ஒரு பொதுத்தொகுதி உட்பட இரண்டு அல்லது மூன்று  தனித் தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். எண்ணிக்கை முடிவான பிறகுதான் எந்தெந்த தொகுதி எந்தெந்த பகுதி என்பதை நாங்கள் முடிவு செய்வோம். இப்போதைக்கு எங்கள் எண்ணம் என்ன என்பதை எங்கள் விருப்பம் என்ன என்பதை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். அதனை, முதல்வர் மு.க. ஸ்டாலினோடு திமுக குழுவினர் பகிர்ந்து கொண்ட பின்னர் உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். கூட்டணி கட்சிக்கு இடையில் உள்ள அரசியல் ரகசியங்கள் குறித்து வெளிப்படையாக பேச முடியாது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும் என்னென்ன பேசினாலும் திமுக அரசுக்கு எதிரான களங்கத்தை முயற்சித்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் அது எடுபடாது. தமிழ்நாடு வேறு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வேறு. 

Advertisment

2026 தேர்தல் மீண்டும் பாஜகவினருக்கு தமிழ்நாட்டு மக்கள் அதனை உணர்த்துவார்கள். எங்களுக்கான பங்களிப்பு எங்களுக்கான பகிர்வு என்ன என்பது குறித்தும் நாங்கள் எங்கள் கருத்தை உறுதிபட தெரிவித்திருக்கிறோம். அதே வேளையில் கடந்த தேர்தலில் நாங்கள் இந்த கூட்டணியின் வெற்றி எவ்வளவு முக்கியம் என்று கூறினோமோ அதே உணர்வோடு இன்றைக்கும் நாங்கள் அதிலே உறுதியாக இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டு அரசியல் சூழல். அதே சூழல்தான் இருக்கிறது. இங்கே மதவாத அரசியலுக்கு இடமில்லை. சாதியவாத அரசியலுக்கு இடமில்லை. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு தமிழ்நாட்டின் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. 

mks-birthday-vck
கோப்புப்படம்

அதில் திமுகவுக்கு என்ன பங்கு இருக்கிறதோ அதே பங்கு அந்தந்த கட்சியின் வலிமைக்கு ஏற்ப உள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ்நாட்டின் இந்த சுமுகமான அரசியல் சூழலை மதவாத சக்திகளால் பாதிக்கச்செய்வதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வு இருக்கிறது. அந்த பொறுப்புணர்வோடு எங்கள் அதிகார பகிர்வையும் உரிமையோடு எடுத்துரைத்திருக்கிறோம். இது குறித்து முதல்வரிடமிருந்து எங்களுக்கு மீண்டும் அழைப்பு வரும்போது தெரிவிப்போம். தொடக்கத்தில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தையே முன்வைத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். 

2001க்கு முன்னாள் மூப்பனாரோடு நாங்கள் களத்திலே இறங்கிய போது அதிகாரம் இல்லாத ஒரு சமூகமாக ஒடுக்கப்பட்ட சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்திற்கு அதிகார பகிர்வை கோருகிறோம் என்ற கருத்தை முன்வைத்தோம். அந்த நிலைப்பாட்டில் இன்றைக்கும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழல் அதற்கு ஏற்ப இன்னும் கனியவில்லை. ஆகவே இன்றைக்கு நாங்கள் அந்த கோரிக்கையை வைக்கவில்லை. எங்களுக்கான தொகுதி எண்ணிக்கையைதான் அதிகார பகிர்வு என்கிற பெயரில் சொல்லுகிறோம்” எனத் தெரிவித்தார்.