தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் நேற்று (22.02.2026) முதல் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது.
அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்களான திருச்சி சிவா எம்.பி., ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களான அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திமுகவிடம் 5 தொகுதிகள் ஒதுக்கக் கேட்டுள்ளோம். குறைந்தபட்சம் 4 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/mmk-jawaharuthulla-our-image-2026-02-23-10-30-37.jpg)
இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 15ஆம் தேதி (15.02.2026 நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (23.02.2026) ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம், ம.தி.மு.க.வுடன் இன்றும், பிப்ரவரி 26ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 27ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/mmk-jawaharuthulla-team-arivalayam-2026-02-23-10-29-56.jpg)